Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (5.11.2025 புதன் கிழமை), மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், பூத் (பாகம்) கிளைக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் (online) ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விபரங்களை மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் முழுமையாகக் கேட்டறிந்து, இப்பணியினை விரைந்து முடிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு, தமிழ் நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது மிகவும் முக்கியமான பணி என்பதாலும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு இது சரியான தருணம் என்பதாலும் இதில் தனிக் கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து,
2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் விரிவாக ஆலோசனை வழங்கினார்.
Hindusthan Samachar / vidya.b