பதிவுத்துறை உதவி ஐஜி பதவி உயர்வில் சமூக அநீதி நிகழ்ந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச) உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காததால் 20% எம்.பி.சிகளுக்கு பதவி உயர்வு மறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில்
Anbumani


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச)

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காததால்

20% எம்.பி.சிகளுக்கு பதவி உயர்வு மறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் மாவட்ட பதிவாளர்கள் 30 பேருக்கு உதவித் தலைவர்களாக பதவி உயர்வு வழங்குவதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலுமாக அவமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐவருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் உதவி ஐ.ஜி. பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் திமுக அரசு சமூகநீதியை படுகொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பத்திரப்பதிவுத் துறையில் இளநிலை உதவியாளர், இரண்டாம் நிலை சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலமாகவும், பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. இதில் உள்ள குறைகளை களையக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதவி உயர்வுக்கான பணி மூப்புப் பட்டியல் போட்டித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட வேண்டும்; அந்த பட்டியலின் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பதிவுத்துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கான திருத்தப்பட்ட பணிமூப்புப் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தயாரித்து பதிவுத்துறைக்கு அனுப்பி வைத்தது. அந்தப் பட்டியலை பதிவுத்துறை வெளியிடுவதுடன், அதனடிப்படையில் பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். ஆனால், இன்று வரை அந்தக் கடமைகளை பதிவுத்துறை மேற்கொள்ளவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, சமூகநீதிக்கும் எதிரானதாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பணிமூப்புப் பட்டியல் இன்று வரை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனடிப்படையில் தான் இப்போது மாவட்ட பதிவாளர்கள் 30 பேருக்கு உதவி ஐஜிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடைபிடித்த இந்த தவறான வழிமுறையின் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 சார்பதிவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவி ஐஜி பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. மொத்த பதவி உயர்வில் இது 20% ஆகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்படும் போது, போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த அவர்கள், வெகு காலத்திற்கு முன்பாகவே மாவட்ட பதிவாளர் நிலையை அடைந்திருப்பார்கள். மாவட்ட பதிவாளர் நிலையிலும் அவர்கள் பணி மூப்பு பெற்றிருப்பார்கள் என்பதால் அவர்கள் மாவட்ட பதிவாளராக தகுதி காண் பருவத்தை நிறைவு செய்வதிலிருந்து விலக்களித்து நேரடியாக உதவி ஐஜியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். வருவாய்த் துறை உள்ளிட்ட பல துறைகளில் இந்த முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், பதிவுத்துறையில் மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது சமூகநீதிக்கும், இயற்கை நீதிக்கும் இழைக்கப்படும் துரோகமாகும். இதனால் தான் தகுதியுடைய எம்.பி.சி பதிவாளர்கள் 5 பேருக்கு உதவி ஐ.ஜி பதவி உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது.

பதவி உயர்வுக்கான தகுதி காண் நாளில், எந்த வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பல சார்பதிவாளர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் விடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் பல மாதங்களாக கூறப்பட்டு வரும் நிலையில், அது குறித்து குறைந்தபட்ச விசாரணை கூட செய்வதற்கு பதிவுத்துறை தயாராக இல்லை. பதிவுத்துறையின் தவறுகளால் பதிவாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமல்ல.

ஒருபுறம் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படும் நிலையில், இன்னொருபுறம் தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் பதவி இறக்கம் செய்யப்படாமல் அதே பதவியில் தொடர அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தகுதியின்றி பதவி உயர்வு பெற்ற 7 பேர் மாவட்ட பதிவாளர் பணியியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அவர்கள் 7 பேரும் இன்று வரை மாவட்டப் பதிவாளர்களாக பணி செய்வதாக கூறப்படுகிறது. இது இன்னும் மோசமான சமூக அநீதியாகும்.

இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியான பணிமூப்புப் பட்டியல் முறையாக வெளியிடப்படாதது தான். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டால் தான், தகுதியானவர்களுக்கு பணிமூப்பு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க முடியும். அந்த வாய்ப்பை வழங்காமல் நேரடியாக பதவி உயர்வு ஆணை தயாரிக்கப்பட்டால், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா? என்பது யாருக்கும் தெரியாது. பதவி உயர்வில் முறைகேடுகள் நடப்பதற்கு தான் இது வழி வகுக்கும்.

இந்த சமூகஅநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டும். தமிழக பதிவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். இளநிலை உதவியாளர், இரண்டாம் நிலை சார்பதிவாளர், முதல் நிலை சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர் ஆகிய பணிகளுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியலை பதிவுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும்; அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ