Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 5 நவம்பர் (ஹி.ச.)
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்களில் பிரசித்தி பெற்ற ஒன்று அன்னாபிஷேக பெருவிழா ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் அஸ்வினி நட்சத்திரத்தின்போது அண்ணாமலையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று (நவ 4) இரவு 9.45 மணிக்கு தொடங்கி இன்று (நவ 5) இரவு 7.27 மணிக்கு நிறைவடைகிறது.
அதன்படி அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. சுவாமிக்கு அன்னத்தாலும், உண்ணாமுலையம்மனுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களாலும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது பக்தர்கள் தரிசனம் செய்வது மரபு கிடையாது என்பதால் 3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
அன்னாபிஷேகத்தில் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால், இன்று முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ராஜகோபுரம் வழியாக ஒற்றை வழி வரிசை நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
பவுர்ணமி என்பதால் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். திரளான பக்தர்கள் கிரிவலம் செய்து வருகின்றனர்.
கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, சிறப்பு பேருந்து போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b