Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 5 நவம்பர் (ஹி.ச.)
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும். இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில், கடந்த மாதம் 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17-ந் தேதி, மனுதாக்கலுக்கு இறுதி நாள். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாக இருந்தது.
121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோதிலும், பா.ஜனதா கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இறுதி நாளில், முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 3 கூட்டங்களில் பங்கேற்றார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 5 கூட்டங்களில் பங்கேற்றார். பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஒரு கூட்டத்தில் பேசியதுடன், வாகன பேரணியும் நடத்தினார்.
பிரதமர் மோடி, பா.ஜனதா பெண் தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார். முதல்-மந்திரி நிதிஷ்குமார் சில கூட்டங்களில் பேசினார்.
அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, முன்னாள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோர் பா.ஜனதாவுக்காக வாக்கு சேகரித்தனர்.
எதிர்க்கட்சி கூட்டணிக்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 3 கூட்டங்களில் பேசினார். தேஜஸ்வி யாதவ், அடுத்தடுத்து பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா), துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (அலிநகர்), துணை முதல்-மந்திரி விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை), ஆனந்த்சிங் (மொகமா) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
இந்நிலையில் 121 தொகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM