இரட்டைக்குளம் இணைப்பு கால்வாய்: ஏமாற்றிய திமுக அரசு - காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிருப்தி
தென்காசி, 5 நவம்பர் (ஹி.ச.) இரட்டைக்குளம் - ஊத்துமலை பெரியகுளம் உள்ளிட்ட இரண்டு குளங்களை இணைக்கும் வகையில், இரட்டைகுளம் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தருவதாக கூறி தற்போதைய திமுக அரசு தென்காசி மாவட்டத்தில் உள்ள மக்களிடம் வாக்குறுதி கொடுத்து
Congress MLA Palani Nadar


தென்காசி, 5 நவம்பர் (ஹி.ச.)

இரட்டைக்குளம் - ஊத்துமலை பெரியகுளம் உள்ளிட்ட இரண்டு குளங்களை இணைக்கும் வகையில், இரட்டைகுளம் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தருவதாக கூறி தற்போதைய திமுக அரசு தென்காசி மாவட்டத்தில் உள்ள மக்களிடம் வாக்குறுதி கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்ற நிலையில், ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை இரட்டைக்குளம் கால்வாய் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமிழக முதல்வர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் போது அதற்கான திட்டத்தை அறிவிப்பார் என திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மக்களை ஏமாற்றி வந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் கடந்த 29-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், இரட்டை குளம் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், பல வருடங்களாக பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், அதற்கு சான்றாக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினரான பழனி நாடார், திமுக அரசின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தர வலியுறுத்தி பலமுறை சட்டமன்றத்தில் தான் கோரிக்கை வைத்து இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வரும் இதை நிறைவேற்ற எந்த விதமான அறிவிப்பும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவான பழனி நாடார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் நிலையில், இந்த வாக்குறுதியால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தன்னை திட்டுவதாகவும், இனிமேல் திமுக அரசை நம்பி பலன் இல்லை எனவும், அரசு அனுமதி கொடுத்து நிலத்தை கையகப்படுத்தி தந்தால் தனது சொந்த நிதியில் கூட இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN