Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.)
பீஹார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் நேற்று (நவ 04) மாலையுடன் நிறைவடைந்துள்ளது.
நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குத்திருட்டு பற்றி புதுடெல்லியில் இன்று (நவ.,05) காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது. 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 ஓட்டுக்கள் போலி வாக்காளர்கள். 93 ஆயிரத்து 174 ஓட்டுக்கள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்க் வாக்காளர்கள் (ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்) 19 லட்சம் பேர் உள்ளனர். ஓட்டுப்பதிவுக்குப் பிறகான தேர்தல் கருத்துக்கணிப்புகள், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் மாறி வந்தது.
ஓட்டு எண்ணிக்கைக்கு 2 தினங்களுக்கு முன்பாக, முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜ கண்டிப்பாக ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார். அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.
ஹரியானாவில் ஏதோ தவறு இருப்பதாகவும், எதுவும் சரியாக நடைபெறவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர்களிடமிருந்து நிறைய புகார்கள் வந்தன.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநில தேர்தலில் ஓட்டு செலுத்தி இருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பெயர் ஹரியானா மாநில வேட்பாளர் பட்டியலில் சேர்த்தது எப்படி?
ஆட்சி திருட்டு நாட்டின் ஜனநாயகத்தை அழித்தது. எஸ்.ஐ.ஆர். என்ற புதிய ஆயுதம் மூலம் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள். ஹரியானாவை தொடந்து பீகாரில் ஆட்சி திருட்டுக்கான பணியை தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜக தொடங்கிவிட்டது. இந்திய இளைஞர்களுக்கு ஜனநாயகத்தை காப்பாற்றும் வலிமை உள்ளது.
இவ்வாறு ராகுல் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b