மின்சாரப் பேருந்துகளின் மொத்த விலை ஒப்பந்த முறையில் செலவினம் குறைவு - மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்சாரப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 255 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனையடுத்து மின்சாரப் பேருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்து இயக்காமல் மொத்த விலை ஒப்பந்த அடிப்பட
மின்சாரப் பேருந்துகளின் மொத்த விலை ஒப்பந்த முறையில் செலவினம் குறைவு - மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்சாரப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 255 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனையடுத்து மின்சாரப் பேருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்து இயக்காமல் மொத்த விலை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதால் வருவாயை விட செலவு பல மடங்கு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் மின்சாரப் பேருந்துகளால் போக்குவரத்துக் கழகத்தின் மொத்த செலவு கணிசமாக குறைவதாக மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைக்க 5000-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் மொத்த விலை ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

மின்சாரப் பேருந்துகளை நேரடியாக வாங்கும் செலவு, பராமரிப்பு சிக்கல்கள் மற்றும் உயர் தொழில்நுட்பம் காரணமாக மொத்த விலை ஒப்பந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதே நடைமுறைதான் உள்ளது.

இந்த முறையில் ஒப்பந்த நிறுவனம் பேருந்துகளை கொள்முதல் செய்து 12 ஆண்டுகளுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கி பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயக்கப்படும் கிலோமீட்டர் அடிப்படையில் தொகை வழங்கப்படுகிறது.

டீசல் பேருந்தை இயக்குவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.128 செலவாகும். மின்சார பேருந்துகளுக்கான இயக்கச் செலவு கிலோமீட்டருக்கு ரூ.92 மட்டுமே.

இந்த செலவீனங்களை ஒப்பிடுகையில், மின்சாரப் பேருந்துகளின் மொத்த விலை ஒப்பந்த முறையில் மூலதனச் செலவு, பராமரிப்பு செலவு, ஓட்டுநர் ஊதியம், பயிற்சிக்கான செலவுகள் ஆகியவை உற்பத்தியாளரால் ஏற்கப்படுவதால், போக்குவரத்துக் கழகத்தின் மொத்த செலவு கணிசமாகக் குறைகிறது. நேரடி கொள்முதல் மற்றும் பராமரிப்பு முறையுடன் ஒப்பிடும்போது, இந்த முறையில் செலவினம் கணிசமான அளவு குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b