Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 5 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.6) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக இன்று (நவ.5) மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை 3 மணிக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்குச் செல்லும் வழியில், கொடை ரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர், வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் அவர், அன்று இரவு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.
நாளை (நவ.6) காலை 10 மணிக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 32-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
அதில், 375 மாணவிகளுக்கு நேரடியாகவும், 8,111 மாணவிகளுக்கு அஞ்சல் வழியாகவும் என மொத்தம் 8,486 மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் சிறப்பு விருந்தினராக ஓடிசா மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாஞ்சலி தாஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
விழா முடிந்து, பிற்பகல் 3 மணிக்கு ஆளுநர் கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு, கொடை ரோடு முதல் கொடைக்கானல் வரை 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இன்று மாலை 3 முதல் 5 மணிக்குள் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு, பெருமாள்மலை பகுதிக்கு செல்வோர், அதற்கு முன்னதாக செல்லவும், நாளை (நவ.6) காலை 9.30 முதல் பகல் 2.30 மணி வரை, கொடைக்கானல் நாயுடுபுரம், அட்டுவம்பட்டி பகுதியில் லாரிகளை இயக்க வேண்டாம் எனவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b