Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 5 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை திருவண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பெங்களூரில் இருந்து காரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா எடுத்து வந்து விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முருக்கம்பாடி காப்பு காட்டு பகுதியில் சொகுசு காரில் கடத்தியவரப்பட்ட குட்கா பான் மசாலா இருசக்கர வாகனத்தில் மாற்றப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சொகுசு காரையும் அதிலிருந்து கணவன் மனைவி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் என மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளான சலீம்பாஷா(42), ஹஜிரா பேகம்(54) ஆகியோர் பெங்களூருவில் இருந்து காரில் 200 கிலோ எடை கொண்ட இரண்டு லட்சம் மதிப்பிலான குட்கா பான் மசாலாவை எடுத்து வந்து திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த மேகனாதன்(27) என்பவருக்கு விற்பனைக்கு கொடுத்ததாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து தம்பதியினர் உட்பட மூன்று பேரையும் கைது செய்த மணலூர்பேட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், இருசக்கர வாகனம் 200 கிலோ எடை கொண்ட 2 லட்சம் மதிப்பிலான தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காப்பு காட்டில் கைமாற்றப்பட்டபோது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன தணிக்கையின் போது 30 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலாவையும் சொகுசு காரையும் மணலூர்பேட்டை போலீசார் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN