Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ளது.
இந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் இன்று (நவ 05) பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தொடர்பான 10 நாள் விழா அவர் பிறந்த இடமான நான்கானா சாஹிபி நகரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு 2,100-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி உள்ளது.
இதையடுத்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வாகா - அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பூக்களைத் தூவியும் பாகிஸ்தான் அதிகாரிகள் வரவேற்றனர்.
நான்கானா சாஹிப் நகரில் குருநானக்கிற்கு கட்டப்பட்டுள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தளத்தில் இவர்கள் கூட உள்ளனர்.
அங்கு வழிபாடு மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள், பின்னர் கர்தார்பூருக்கும் பிற இடங்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b