கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - போலீசாரிடம் இன்றும் சிபிஐ விசாரணை
கரூர், 5 நவம்பர் (ஹி.ச.) கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அக்.30-ம் தேதி கரூர் நகர இ
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் -  போலீஸாரிடம் இன்றும் சிபிஐ விசாரணை


கரூர், 5 நவம்பர் (ஹி.ச.)

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த வர்த்தகர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அக்.31 மற்றும் நவ.1-ம் தேதிகளில் வேலுசாமிபுரத்தில் சாலையை 3டி லேசர் ஸ்கேனர் மூலம் அளவீடு செய்யும் பணியையும், அப்பகுதி வர்த்தகர்களிடம் விசாரணை செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, செப்.27-ம் தேதி தவெக பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் 7 பேர் கரூர் சுற்றுலா மாளிகையில் நேற்று (நவ 04) சிபிஐ முன்பு ஆஜராகினர். அவர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்கள் பணியில் இருந்த இடத்தில் என்ன நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று (நவ 05) மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஆஜரான 7 பேரில் மீண்டும் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்புப்பணியில் இருந்த 3 காவல் உதவி ஆய்வாளர்களிடமும் கரூர் சிபிஐ அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b