Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)
ஆண்டுதோறும் நவம்பர் 5-ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதன்மூலம் எதிர்கால பேரிடர்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம் ஆகும்.
நடப்பாண்டைப் பொறுத்தவரை Sendai Seven என்ற 7 குறிக்கோள்கள், 7 ஆண்டுகள் என்ற கருத்தை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது பேரிடர் பாதிப்பைக் குறைப்பது,பேரிடர் ஆபத்தை சமாளிக்கும் வகையிலான கட்டமைப்பு மேம்பாடு, உயிர்களைக் காப்பாற்றுவது ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன
கடந்த 100 ஆண்டுகளில் 58 சுனாமி பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன.
இதில் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சராசரியாக ஒரு பேரிடரின் போது 4,600 பேர் பலியாகி இருக்கின்றனர். இவற்றில் அதிகபட்ச உயிரிழப்புகளைப் பதிவு செய்தது இந்தியப் பெருங்கடலில் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலை சம்பவம் தான்.
இதன்மூலம் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இது உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான இயற்கை பேரிடர் ஆகும்.
அதன்பிறகு தான் உலகின் பல்வேறு நாடுகளும் விழித்துக் கொண்டன. சுனாமியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் தொடங்கின. முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சுனாமி பாதிப்புகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
உலகம் முழுவதும் சூறாவளி, புயல்கள், வெள்ளம், சுனாமி போன்றவற்றால் எளிதில் பாதிக்கும் வகையில் 700 மில்லியன் மக்கள் கடலோர, தாழ்வான மற்றும் அதிக ஆபத்து கொண்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலையே பெரிதும் சார்ந்து வாழ்கின்றனர். எனவே வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செய்வதற்கு வாய்ப்பில்லை. இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை வசதிகளை செய்து தர வேண்டும்.
சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதுசார்ந்த அடிப்படை அறிவு பொதுமக்களிடம் இருக்க வேண்டும். இதன்மூலம் ஆபத்தில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க முடியும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூற முடியும்.
தாய்லாந்து நாட்டில் பழங்குடியின தலைவர் உரிய நேரத்தில் செயல்பட்டு சுனாமி வருவது பற்றி அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். அருகிலிருந்த மலைப் பகுதியின் மீது ஏறிக் கொண்டனர். இவருக்கு சுனாமியின் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்ததால் தான் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே சூறாவளி, புயல் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் இருக்கின்றன. இதேபோல் சுனாமி எச்சரிக்கை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை கடலோரப் பகுதிகள் முழுமைக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். எச்சரிக்கை தொடர்பான அறிவிப்புகள் விரைவாக சம்பந்தப்பட்ட மக்களைச் சென்று சேரும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களைக் கையாள்வதற்கு பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. எனவே குறிப்பிட்ட மண்டலத்தில் சுனாமி ஏற்படப் போகிறது என்று கணித்து விட்டால் உடனே அருகிலுள்ள மண்டலங்களுக்கும் தகவல் தெரிவித்து விடலாம்.
அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
அதேசமயம் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய பகுதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தரலாம். மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கலாம். இதுதொடர்பான ஒத்துழைப்பு கடலோரப் பகுதிகள் அனைத்திலும் தேவைப்படுகிறது.
சூறாவளி, சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது கட்டடங்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.எனவே இயற்கை பேரிடர்களைத் தாங்கும் வகையில் கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். மேலும் ஆபத்தான சூழல்களில் தஞ்சமடையும் வகையில் பிரத்யேக பாதுகாப்பான இடங்களையும் கட்டமைக்க வேண்டும். 1970களில் வங்கதேசத்தில் மிகப்பெரிய வெள்ளம் வந்த போது, பல அடுக்குமாடிகள் கொண்ட அரசு கட்டடங்களின் மேல்பகுதிகளில் ஏறிக் கொண்டு பொதுமக்கள் தப்பித்துக் கொண்டனர்.
இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வருங்காலத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கலாம்.
Hindusthan Samachar / Durai.J