Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 5 நவம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயிலை தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பாகவே சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் இந்தக் கோயிலைக் கட்டியதாக இத்தல வரலாறு கூறுகிறது.
இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோயிலுக்கு குகநாதீஸ்வரர் கோயில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும். இதன் உயரம் 5 அடிகள் ஆகும்.
இந்த குகநாதீஸ்வரர் கோயிலில்,ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியான இன்று (நவ 05) அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அன்னாபிஷேக நிகழ்வை முன்னிட்டு இன்று காலையில் மூலவர் குகநாதீஸ்வரருக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தை சாற்றி அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு அலங்கார சோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b