Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 5 நவம்பர் (ஹி.ச.)
‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் ஆகும். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள். திருமாலும், சிவபெருமானும் இணைந்து, சங்கரநாராயணராக அருள் பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இரு வேளையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (நவ 05) காலை 6.05 மணிக்கு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம், நவம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b