அரசியல் பரபரப்புக்காக என்கவுண்ட்டர்கள் செய்யப்படுகின்றன - த வெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மேடையில் பேசியபோது, செப்டம்பர் 27, நமது த
Arunraj


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மேடையில் பேசியபோது,

செப்டம்பர் 27, நமது துக்க நாள். 41 சொந்தங்களை இழந்திருக்கிறோம். எவ்வளவு தேற்றினாலும் அந்த இழப்பை நாம் ஈடு செய்ய முடியாது.

இருப்பினும், குடும்பத்தில் ஒருவனாக இருந்து உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வேன் என்று தலைவர் சொன்ன வார்த்தைகள் அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கரூர் நிகழ்வுக்குப் பிறகு எவ்வளவோ சவால்கள், எவ்வளவோ தடைகள். பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து தவெகவை முடக்க பலர் முயற்சிகள் செய்தார்கள். முடக்க இது பணத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. கரூர் நிகழ்வை சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.

2026-இல் தலைவர் தலைமையில் நேர்மையான நல்லாட்சி அமைவதே உயிரிழந்தவர்களுக்கு செய்யப்படும் அஞ்சலியாக கருதுகிறேன். அதனை உறுதியாக செய்வோம். நான் சுற்றுப்பயணம் சென்றபோது, மக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்து கொண்டேன்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எத்தனை பாலியல் வன்கொடுமைகள், எத்தனை லாக்-அப் மரணங்கள். இது காவல்துறையில் உள்ள நிர்வாக சீர்கேட்டின் வெளிப்பாடு. காவல்துறைக்கு ரெகுலர் டிஜிபி நியமிக்கப்படவில்லை. இதை கூட செய்யாமல் முதல்வருக்கு வேறு என்ன வேலை? ஒரு சிலரை டிஜிபி பதவியில் அமர்த்த திட்டமிட்டு இது செய்யப்படுகிறது.

ஒரு குற்றம் நடந்தால், அதனை தீர விசாரித்து, ஆதாரங்களை கொண்டு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு பயம் வரும். ஆனால், அரசியல் பரபரப்புக்காக என்கவுண்ட்டர்கள் செய்யப்படுகின்றன. அவை உண்மையான நீதி கிடையாது. உண்மையில் அது உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடவே வழி செய்யும்.

மற்றொரு காரணம், காவல்துறையில் உள்ள பணிச்சுமை. அவர்களுக்கு விடுமுறை இல்லை. ரோந்து போக ஆட்கள் இல்லை. இவை அனைத்தும்தான் குற்றங்கள் நடக்க காரணங்களாக உள்ளது. ஆனால், இவற்றை சரி செய்ய நேரமில்லாத முதல்வர் சினிமா மட்டும் பார்க்க நேரம் இருக்கிறது.

*எந்த ஆட்சியிலும் இல்லாத ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதன் லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு கே.என்.நேரு துறையில் நடைபெற்ற தேர்வாணைய ஊழல். காண்ட்ராக்ட்ல அடிச்சது பத்தாதுனு இதுல கூடவா ஊழல். அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன மாதிரி, ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க, ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க அண்ணே. எதுக்கு படிக்கும் இளைஞர்கள் வாழ்க்கைல விளையாடுறீங்க?*

*திமுகவினர் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்பவர்கள். டெண்டர் எடுக்க Site inspection certificate தேவை என்ற புதிய உத்தியை வைத்து அண்ணன் எ.வ.வேலு ஊழல் செய்து வருகிறார்.*

அரசு கேபிள் துறையில் இருந்து பாலிமர், புதிய தலைமுறை சேனல்களை எந்த அடிப்படையில் முடக்கப்படுகிறது. நீங்கள் வேண்டுமென்றால் ஸ்டாலின் மாடல் ஆட்சினு சொல்லிக்கோங்க. திராவிட மாடல் ஆட்சினு சொல்லி தலைவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்.

இலவச திட்டங்களை தவிர திமுக அரசு வேறு ஏதாவது திட்டத்தை செயல்படுத்தியிருக்காங்களா? அரசு வரிப்பணத்தில் கொடுத்துவிட்டு, கொடுத்துட்டோம், கொடுத்துட்டோம்னு பெருமை பேசுறீங்களே. உங்களுக்கே அழகா இது? ஒரு அட்சி ஆயிரம் தரோம்னு சொல்றாங்க. மற்றொரு கட்சி 2000 தரோம்னு சொல்றாங்க. இதுக்கு என்னதான் முடிவு? இலவசங்கள் யாருக்கு தேவையோ, அதை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இதை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு அச்சுற்றுத்தலாக இருக்கும். இதற்காக ஒரு ஆணையம் அமைத்து முடிவு செய்யலாம்.

திமுகவின் கொடுமை ஒருபுறம், பாசிஸ பாஜகவின் கொடுமை மற்றொரு புறம். சிபிஐ, தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை கொலை செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு SIR கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல. இவ்வாறு பணமதிப்பிழப்பு, UCC போன்றவற்றை கொண்டுவந்து மக்களை சிந்திக்க விடாமல், கொதிநிலையிலேயே வைத்திருப்பது பாஜக, RSSஇன் திட்டம்.

ஒரு தொகுதிக்கு 30 கோடி, 40 கோடி கொடுத்து வெற்றி பெற்றால், நிச்சயமாக நல்லாட்சி அமையாது. மக்களே யோசியுங்கள். 1000 ரூபாயை தியாகம் செய்யுங்கள். 2026இல் நிச்சயம் தளபதி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ