Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)
கடந்த ஆண்டில், மின்வாரியத்தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறுவனம் துவக்கப்பட்டது. இந்நிறுவனம், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, பசுமை மின் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தற்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் கரூர் மாவட்டம், வெள்ளியணையில் தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் மற்றும் அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மூன்று மணி நேரத்துக்கு சேமித்து வைத்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், மின்கல ஆற்றல் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடியில் கயத்தாறு, மதுரை புளியங்குளம், கன்னியாகுமரி முப்பந்தலில், 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி, 18.75 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை, தனியார் நிறுவனம் வாயிலாக அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின்நிலையத்தில், 25 மெகாவாட், புதுக்கோட்டையில் 25, புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் 50, திருவாரூரில் 50, கோவை காரமடையில் 75, தேனி தப்பகுண்டில் 50, திருப்பூர் ஆணைகடவில் 100 மெகாவாட் என, 375 மெகாவாட் பசுமை மின்சாரத்தை, நான்கு மணி நேரத்துக்கு சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பசுமை எரிசக்தி கழகம், டெண்டர் கோரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, விரைவில் டெண்டர் கோரப்படவுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b