’ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்
சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.) கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. த
’ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்


சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)

கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தவெக சார்பில் ரூ 20 லட்சம் நிவாரணநிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் இன்று (06.11.2025) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் மூத்த அமைச்சர்களின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பங்குபெறக்கோரி தமிழக அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் சார்பில் அழைப்புக் கடிதம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b