Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 6 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் பேருந்து நிலையம் முன்பாக இன்று (நவ.06) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர் அணி மற்றும் நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள் திரும்பும் ரவுண்டனாவை மறித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு வந்த அரியலூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம், போக்குவரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது. அருகிலேயே நீதிமன்றம் அமைந்துள்ளதால் சற்று தள்ளி நின்று போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறியுள்ளார்.
அதற்கு மறுத்து பாஜகவினர் காவல் ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாஜக-வினர் கையில் வைத்து பேசிக் கொண்டிருந்த ஒலி வாங்கியை ”ஆஃப்” செய்ய காவல் ஆய்வாளர் முயன்றதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பாஜகவினர் மைக் மூலம் பேசியதால் அருகில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை காவல் ஆய்வாளர் கையில் எடுத்து ஓரமாக வைத்தார். இதனையடுத்து பாஜகவினர் சாலையில் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
பின்னர் காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / vidya.b