Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)
ஆனைமலை பெத்தநாயக்கனூர் சாலையில் அய்யாமடை பகுதியில், உள்ள ஒரு நெல் வயலில் அறுவடை பணிகள் முடிந்து, நெல்மணிகள் மூட்டையாக கட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், வயலில் மீதமிருந்த வைக்கோல்களை பொள்ளாச்சியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொள்முதல் செய்திருந்தார்.
அதனை கட்டுகளாக கட்டி கொண்டு செல்வதற்கான பணிகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 40 கட்டுகளைக் கொண்ட வைக்கோல்களை ஈச்சர் லாரியில் ஏற்றினர். லாரியை ஆனந்தகுமார் (35) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
வயலில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டபோது, அங்கு தாழ்வாக சென்று கொண்டு இருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசியது. இதனால் வைக்கோல் தீப்பற்றியது. இதனைக் கண்ட லாரியில் இருந்த நான்கு தொழிலாளர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர்.
லாரி தீப்பிடித்து எரிவதைக் கண்ட ஓட்டுனர் ஆனந்த் லாரியிலிருந்து கீழே குதித்தார். உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து, நிலைய அலுவலர் கணபதி தலைமையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர்.
திறந்தவெளியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இதனால் ரூ. 7 லட்சம் மதிப்பில்லான ஈச்சர் லாரி மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புடைய வைக்கோல் முற்றிலும் எரிந்து சேதமானது.
Hindusthan Samachar / ANANDHAN