Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)
சிஐடியு 16-வது மாநில மாநாட்டை முன்னிட்டு எஸ்.என்.ஆர் அரங்க வளாகத்தில் நடைபெற்ற “சிவப்பு வேர்களின் குடும்பச் சங்கமம்” நிகழ்ச்சியில் உழைக்கும் மக்கள் உரிமைகளுக்காக உயிர்த்தியாகம் செய்த 12 தியாகிகளின் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தொடக்க உரை நிகழ்த்த, மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ஆர்.வேலுசாமி வரவேற்றார்.
சிபிஎம் மூத்த தலைவரும் கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் “தியாகி ராக்கியண்ணன்: ஒரு வர்க்கப் போராளியின் வரலாறு” மற்றும் “வியர்வை குருதிகள்: கோவை செங்கொடி தியாகிகளின் வீரவரலாறு” ஆகிய இரு நூல்களை வெளியிட்டார். தியாகிகளின் வாரிசுகளான வி.இராமமூர்த்தி, மகேஷ் கருணாகரன், மணி சுப்பையன் ஆகியோர் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.
மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், வரவேற்புக்குழுத் தலைவர் சி.பத்மநாபன், துணைத் தலைவர் ஏ.ராதிகா ஆகியோர் செங்கொடி காத்த தியாகிகளைப் பற்றி உரையாற்றினர். தியாகிகள் குடும்பத்தினர் சார்பில் வத்சலா ரமணி ஏற்புரை நிகழ்த்தினார்.
ஸ்டேன்ஸ் மில், வால்பாறை, ராக்கியண்ணன், முத்து, பூசாரி, நந்தகோபால், அப்பாயி, ஆஷர்மில் பழனிச்சாமி, சீராணம்பாளையம் பழனிச்சாமி, திருப்பூர் பன்னீர்செல்வம், இடுவாய் ரத்தினசாமி, வெள்ளியம்பாளையம் ஈஸ்வரன் ஆகிய 12 தியாகிகளின் ஜோதி உணர்ச்சிமிகு முழக்கங்களுடன் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தொழிற்சங்க வரலாற்றுக் கண்காட்சியை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் மாநிலத் தலைவர் சவுந்திரராசனும் இணைந்து திறந்து வைத்தனர். மூத்த தொழிற்சங்கத் தலைவர் கே.காமராஜ் தலைமை வகித்தார். கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் எ.என்.ராஜா வரவேற்றார்.
வியாழனன்று (இன்று) காலை 10 மணிக்கு அகில இந்தியத் தலைவர் கே.ஹேமலதா செங்கொடி ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு 9-ஆம் தேதி வரை நடைபெறும். சிவப்பு வேர்களின் குடும்பச் சங்கமமே மாநாட்டு வெற்றிக்கு அச்சாணியாக அமைந்தது என்று சிஐடியு நிர்வாகிகள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan