இன்று பீகார் முதல்கட்ட தேர்தல் - 121 சட்டசபை தொகுதிகளில்  வாக்குப்பதிவு தொடங்கியது
பாட்னா, 6 நவம்பர் (ஹி.ச.) பீகார் சட்டசபை தேர்தல் இன்று மற்றும் 11-ந்தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து
இன்று பீகார் முதல்கட்ட தேர்தல் - 121 சட்டசபை தொகுதிகளில்  வாக்குப்பதிவு தொடங்கியது


பாட்னா, 6 நவம்பர் (ஹி.ச.)

பீகார் சட்டசபை தேர்தல் இன்று மற்றும் 11-ந்தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது.

முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர்.

மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

வேட்பாளர்களில் இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா) மற்றும் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்பட 16 மந்திரிகள் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தற்போது காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

முதல்கட்ட தேர்தலையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM