நெல்லையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு
நெல்லை, 6 நவம்பர் (ஹி.ச) திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் மாணவ, மாணவிகள் கள ஆய்வுப் பயிற்சிக்காக நெல்லை, சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதிக்கு சென்றனர். நெல்லை பழவூர் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் பழைமையான
Nellai


நெல்லை, 6 நவம்பர் (ஹி.ச)

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் மாணவ, மாணவிகள் கள ஆய்வுப் பயிற்சிக்காக நெல்லை, சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதிக்கு சென்றனர். நெல்லை பழவூர் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் பழைமையான பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும்,அழகர் சாஸ்தா கோயிலும் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைந்துள்ளது.

கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பணையைக் கண்டு வியந்த மாணவ, மாணவிகள், அங்குள்ள கற்தூண்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்தத் தடுப்பணையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

உடனடியாக அந்தக் கல்வெட்டுகளைக் கழுவி சுத்தம் செய்து, தொல்லியல் முறைப்படி படியெடுத்தனர். அதில் உள்ள எழுத்துக்களை மாணவ, மாணவிகள் படித்து அதன் பழமையைக் கணக்கிட்டனர். இதில், அந்தக் கல்வெட்டுகளில், 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சுந்தரபாண்டியன், 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குலசேகர பாண்டியன் மற்றும் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட உத்தம பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது தெரிய வந்தது.

மேலும், பழவூர், திருநெல்வேலி போன்ற ஊர்ப் பெயர்களும் இந்தக் கல்வெட்டுகளில் காணப்பட்டன.

இந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராமணர்களுக்கு நிலத்தானம் கொடுத்த தகவல்களையும், அந்த நிலங்களின் எல்லை திசைகளையும் குறிப்பிடுவதாக இருந்தன.

ஆய்வின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக, லார்ட் துரை என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் மாணவர்களுக்குக் கிடைத்தது. இதன் மூலம், இந்தத் தடுப்பணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது என தொல்லியல் பேராசிரியர்கள் உறுதிப்படத் தெரிவித்தனர்.

அருகில் இடிந்து கிடந்த பழைமையான கோயில்கள் மற்றும் மண்டபங்களிலிருந்து கற்தூண்களை எடுத்து வந்து, ஆங்கிலேயர்கள் இந்தத் தடுப்பணையைக் கட்டியுள்ளனர்.

இதனாலேயே, 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டுகள், 200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் காலத் தடுப்பணையில் இடம்பெற்றுள்ளன என்ற வரலாற்று உண்மையை மாணவர்கள் கண்டறிந்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ