Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 6 நவம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை, திருச்சி ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
அதன்படி ரூ.3,300 கோடி செலவில் கிளாப்பாக்கத்தில் இருந்து மகேந்திரா சிட்டி வரை 18.4 கி.மீ., தொலைவுக்கு பேருந்து செல்வதற்கான தனி வழித்தடத்தோடு கூடிய உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 25 மீட்டர் அகலத்தில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலம், பல்வேறு ஆய்வுகள் மூலம் 29 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் லேன்கள் கிடைப்பதோடு அவசர காலங்களில் வாகனங்களை மேம்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த கூடுதல் லேன்களில் பேருந்து விரைவு போக்குவரத்திற்கான தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் BRTS ஒருங்கிணைந்த மேம்பாலமாக இது அமைய உள்ளது.
இந்த மேம்பாலத்தில் 14 பிரதான சந்திப்புகள் இணைக்கப்படுவதால் பெரிய அளவில் விபத்துகள் தவிர்ப்பதோடு, புறநகர் பகுதி மக்களின் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருப்பதும் குறைக்கப்படும்.
மேலும் நெடுஞ்சாலையை அதிவேகமாக காலதாமதம் ஏற்படாமல் பயன்படுத்துவதை மேம்பாலம் உறுதி செய்வதால் பயண நேரமும் குறையும். குறிப்பிட்ட இந்த கட்டுமானத்தில் 5 இடங்களில் உயர் அழுத்த மின் இணைப்புகள் செயல்படுவதால், இந்தவகை இணைப்புகளை மாற்றம் செய்ய சம்மந்தப்பட்ட துறையை அணுகி அகற்றிட தேசிய நெடுஞ்சாலை துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடப்பு நிதியாண்டிலேயே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b