Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் கார்த்திகை 1 ஆம் நாள் (நவ 17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன.
டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது.
ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் என ஒரு நாளைக்கு மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. தேவஸ்தானம் கேட்டு கொண்டதால் வரும் 4ம் தேதி தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதே போல் தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b