மருமகனை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர், 6 நவம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் ஜய்யம்பாளையத்தைச் சேர்ந்த சூர்யா 46 என்பவர் பேருந்து நிலையம் அருகில் பூக்கடை நடத்தி வந்தார். இவரது மருமகன் ராஜசேகர் (31) சூர்யாவின் மகள் சினேகாவை (20) இரண்டாவது திருமணம் செய்து க
Prison


திருப்பூர், 6 நவம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம்,

வெள்ளகோயில் ஜய்யம்பாளையத்தைச் சேர்ந்த சூர்யா 46 என்பவர் பேருந்து நிலையம் அருகில் பூக்கடை நடத்தி வந்தார்.

இவரது மருமகன் ராஜசேகர் (31) சூர்யாவின் மகள் சினேகாவை (20) இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் சூர்யா, தனது மகள் மற்றும் மருமகன் மீது கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், சினேகா மற்றும் ராஜசேகர் இணைந்து பூக்கடை நடத்தி வந்தனர். அதில் வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை தன்னுடைய செலவிற்காக வழங்குமாறு சூர்யா கேட்டதாக தகவல். இதனை அடிப்படையாகக் கொண்டு மூவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வாரத்தில் ஆறு நாட்கள் சினேகா – ராஜசேகர் தம்பதியரும், ஒரு நாள் சூர்யாவும் கடையை பார்த்துக் கொள்ள வேண்டும் என சமரச ஒப்பந்தம் செய்திருந்தனர்.

ஆனால், பின்னர் மருமகன் ராஜசேகர், சூர்யாவிற்கு கடையை நடத்த அனுமதி வழங்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், 16.02.2020 அன்று சூர்யா மற்றும் ராஜசேகர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சூர்யா, “நீ என் மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாய்; நீ இருக்கும் வரை இந்த பூக்கடையை நான் நடத்த முடியாது” என கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, தனது இடுப்பில் வைத்திருந்த பூ வெட்டும் கத்திரிக்கோலை எடுத்து, மருமகன் ராஜசேகரின் நெற்றியில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக காயமடைந்த ராஜசேகர் மண்டை உடைந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனே ஆம்புலன்ஸில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சூர்யாவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட எண்-3 செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை அரசு வழக்கறிஞர் மணிவண்ணன் நடத்தினார். இன்று மாவட்ட கூடுதல் நீதிபதி சி.எம். சரவணன் தீர்ப்பளித்தார். அதில், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, சூர்யாவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனை அடுத்து கொலை குற்றவாளியான சூர்யாவை கோவை மத்திய சிறைக்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN