பௌர்ணமியை முன்னிட்டு பருவதமலை ஏறிய இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
திருவண்ணாமலை, 6 நவம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பருவதமலைக்கு சென்று தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம், இந்நிலையில் பருவதமலை உச்சியில் பிரம்மபுரீஸ்வரர் உடல
Paruvatha Malai


திருவண்ணாமலை, 6 நவம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பருவதமலைக்கு சென்று தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம், இந்நிலையில் பருவதமலை உச்சியில் பிரம்மபுரீஸ்வரர் உடலுறை பர்வதாம்பாள் கோவில் அமைந்துள்ளது, சித்தர்கள் தியானம் செய்ததால் இம்மலை “சித்தர் மலை” என அழைக்கப்படுகிறது.

சுமார் 3,500 அடி உயரம் கொண்ட பர்வத மலையில் கடினமான ஏற்றப் பாதைகள், சங்கிலி வழியாகவே பக்தர்கள் உச்சியை அடைகின்றனர், ஆன்மீக நம்பிக்கையால் பக்தர்கள் மழை, இரவு என பொருட்படுத்தாமல் மலையை ஏறி தரிசனம் செய்கின்றனர்.

அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது தணசேகர் என்ற பக்தர் புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு மலையை ஏறும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், இந்தச் சம்பவம் அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது, உடல் கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களாக இம்மலையில் இதுபோன்ற பக்தர் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக நிகழ்வது கவலைக்குரியதாகும், மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கான குடிநீர் வசதி, பாதுகாப்புக் கயிறு, மருத்துவ முகாம், அவசர மீட்பு குழு, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை ஏற்பாடுகள் இல்லாததால் இவ்வாறான விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பக்தர்கள் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனச் சட்டத்தின் கீழ் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN