Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 6 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஒரு கும்பல் இருக்கிறது.அந்த கும்பலுக்கு தலைமை அன்புமணியும், அவரது துணைவியார் செளமியா அன்புமணியும் இருக்கிறார்கள். ஒற்றுமையாக 46 ஆண்டு காலமாக 80 வயதுள்ள சொந்தங்கள், அதன்பிறகு வந்தவர்களை எல்லாம் உயிருக்கும் மேலாக நினைத்து சங்கத்தையும், கட்சியையும் நடத்தி வந்தேன்.
அதில் சில தவறுகளை நான் செய்தது உண்டு. அதில் ஒன்று தான் அன்புமணியை மத்திய சுகாதார துறை அமைச்சராக நியமித்தது, 2ஆவது தவறு கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்தது. நான் அமைதியாக கட்சியை நடத்தி கொண்டிருக்கும் போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது என அனைவரும் நினைக்கும் வகையில் அவர்களின் செயல் அருவருக்கதக்க வகையில் இருக்கிறது.
உங்கள் வளர்ப்பு சரி இல்லை என சொல்கிறார்கள். அந்த கும்பலில் உள்ளவர்கள் எல்லோருமே நான் வளர்த்த பிள்ளைகள் தான். என்னை அன்போடு அய்யா என அழைத்தவர்கள் தான். ஒரு சில காரணங்களால் இப்போது அந்த கும்பலிடம் சென்று அவர்களின் அறிவுரைப்படி என்னை திட்டி கொண்டிருக்கிறார்கள்.
என்னோடு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது 2 பேர் என்னோடு இருக்கிறார்கள். அதில் 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய் விட்டார்கள். அய்யா மாதிரி கட்சியை யாரும் நடத்த முடியாது. எத்தனை பிரதமர்களை சந்தித்து இருப்பார். கூட்டணி அமைத்திருப்பார்.
தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் பலரோடு கூட்டணி வைத்தேன். யாரும் என்னை பற்றி அவதூறாக யாரும் விமர்சனம் செய்தது இல்லை. பலரும் என்னை பாராட்டி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கூட பிரதமர் என்னை ஆரத்தழுவி பாராட்டினார்.
இப்படி 46 ஆண்டு காலம்பாசத்தோடு பழகியவன் பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி இருக்கிறேன். என்னை எதிர்த்தவர்களையும் நாகரீகமாக பதிலடி கொடுப்போம்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களாக இருந்த நிலையில் இப்போது 38 மாவட்டங்களாக உயர்ந்திருப்பதற்கு நான் தான் காரணம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். இப்படி தமிழ்நாட்டில் பிறர் மனம் புண் படாத வகையில் நாகரீகமாக கட்சியை வளர்த்து வந்த என்னை அன்புமணியும், அவரது துணைவியார் செளமியாவும் என்னுடன் இருந்த சிலரை அழைத்து பொறுப்புகளை கொடுத்துள்ளார்கள்.கோமாளி தனத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமூக வளைத்தளங்களில் என்னை பற்றியும், ஜி.கே.மணி பற்றியும் கேவலமாக பேசுவது, தூண்டிவிடுவது என அன்புமணி தலைமையில் செயல்பட்டு வரும் கும்பல் செய்து வருகிறது. ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் சேர்த்து கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அடிதடி செய்கிறார்கள். அந்த கும்பல் இன்னும் துப்பாக்கியை தான் பயன்படுத்த வில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள்.
அவர்களை தூண்டி விட்டதால் அவர்கள் செய்த தவறுக்கு காவல்துறை இப்போது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இதனை தான் அன்புமணி decent and development politics என்று இவ்வளவு நாளாக சொல்லி வந்தாரா என தெரியவில்லை. சேலத்தில் துக்கம் விசாரிக்க சென்ற எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்கள். நல்ல வேளையாக அவர் தப்பி பிழைத்துள்ளார்.
ஆனால் 12 கார்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒழுக்கத்தோடு நான் வளர்த்த பிள்ளைகளை, கட்சியே உயிர் மூச்சு, அய்யா தான் குலதெய்வம் என சொல்லி வந்தவர்களை ஏமாற்றி ஆசைக்காட்டி சில பேரை இழுத்து தன் வசம் வைத்து கொண்டு என்னையும், என்னோடு இருப்பவர்களையும் மிரட்டி வருகின்றனர்.
வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் திட்டுகிறார்கள். இது போன்ற ஒரு இழிவான கலாச்சாரத்தை உருவாக்கி விட்டார்கள். பாமக கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் இது போன்ற சமூக ஊடக செய்திகளை பார்க்காதீர்கள். உனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்.
பாமக பெயரையோ, என் பெயரையோ பயன்படுத்த கூடாது. இதனை நான் பலமுறை சொல்லி விட்டேன். அப்பன் பெயரை வேண்டும் என்றால் R என இன்ஷியலை போட்டு கொள். அதனை தவிர என் பெயரை பயன்படுத்த கூடாது. 21 பேரை சேர்த்து கொண்டு ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து கொள்.
அந்த கட்சிக்கு பெயர் வேண்டும் என்றால் நல்ல பொருத்தமான பெயரை நான் சொல்கிறேன். என்னோடும், பாமகவோடும் உனக்கு எந்த சம்மந்தமும் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், மறைந்த தலைவர்களும் விரும்பினார்கள்.
நாகரீகமான வகையில் அரசியல் செய்ய வேண்டும் இப்படி கத்தி, கபடா வைத்து கொண்டு அரசியல் செய்வது தான் நாகரீகமான அரசியலா. அந்த கும்பல் செய்வதை கண்டு எந்த நிலையிலும் எதிர்வினையாற்ற கூடாது என பாமகவினருக்கு சொல்லி இருக்கிறேன். ஒரு சீனியர் லீடர் நமது பிரதமர் மோடி அடிக்கடி சொல்வார். அந்த வகையில் உனக்கு நான் சொல்கிறேன்.
நீ புதிய கட்சியை ஆரம்பித்து கொள். நான் 46 ஆண்டு உழைத்து உருவாக்கிய கட்சியில் எல்லா பதவி சுகத்தையும் நீ அனுபவித்து விட்டாய் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும்
மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா உறுப்பினர், கட்சி தலைவர் என பல்வேறு பதவியில் இருந்து அனுபவித்து விட்டாய்.
இந்த பதவிகளை எல்லாம் உனக்கு கொடுத்து நான் மிக பெரிய தவறு செய்து விட்டேன் இனிமேல் என்னுடைய பாசமுள்ள கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணியும், அவரது மனைவி செளமியாவும் தான் காரணம். என் உயிரை விட மேலாக என் கட்சிக்காரர்களை பாசத்தோடு நான் வளர்த்துள்ளேன்.
அன்புமணியும் அவருடன் இருக்கும் அந்த கும்பலும் திருந்த வேண்டும். டிசம்பர் மாதம் 30ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் எங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கருத்துக்கள் கேட்கப்பட்டு யாரோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து
முடிவு எடுக்கப்பட உள்ளது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN