Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 6 நவம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவில் கடந்த வாரம் நியூயார்க், சின்சினாட்டி உள்ளிட்ட நகரங்களுக்கான மேயர் பதவிக்கும், விர்ஜினியா, நியூஜெர்சி மாகாணங்களுக்கான கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.
இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின் அவர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது.
இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோஹ்ரான் மம்தானி, வென்றார்.
சின்சினாட்டி நகர மேயராக இரண்டாவது முறையாக அப்தாப் புரேவல், விர்ஜினியாவின் கவர்னராக கசலா ஹாஸ்மி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் மூவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள். இதில் கசலா ஹாஸ்மி, விர்ஜினியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அட்லான்டிக் சிட்டி, டெட்ராய்ட் ஆகிய மேயர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தோல்விக்கு அதிபர் டிரம்பின் நிர்வாக தோல்வியே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விலைவாசி உயர்வு, பொருளாதார சிக்கல்கள், அரசு நிதி முடக்கம் போன்றவை டிரம்பின் குடியரசு கட்சியின் தோல்விக்கான காரணங்களாக கூறப்படுகிறது.
ஜோஹ்ரான் மம்தானி, 34, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தாய் மீரா நாயர், ஒடிஷாவில் பிறந்தவர்; பிரபல திரைப்பட இயக்குனர். இவரது தந்தை மக்மூத் மம்தானி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். ஜோஹ்ரானின் 7வது வயதில், அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் பிறந்தவர், ஹாஸ்மி, 61. இவரது பெற்றோர், பாகிஸ்தானின் கராச்சியை பூர்வீகமாக கொண்டவர்கள். 4 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் ஹாஸ்மி. ஜார்ஜியா தெற்கு பல்கலையில் இளங்கலை ஆங்கிலமும், எமோரி பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
அப்தாப் புரேவலின், 43, தந்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கு தான் அப்தாப் பிறந்தார். சிறு வயது முதலே அரசியல் ஆர்வம் உடையவர். சட்ட படிப்பு முடித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM