Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 6 நவம்பர் (ஹி.ச.)
கடந்த நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.
உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் நேற்று (நவ 05) இரவு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, இந்திய வீராங்கனைகளிடம், உலகக்கோப்பையை வென்ற ரகசியம் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்த வீடியோவை இன்று (நவ 06) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது,
இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியில் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த பெருமை கொள்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியுடன் உரையாடுவது மகிழ்ச்சியாக இருந்தது. பாருங்கள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவில் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறுகையில்
கடைசியாக 2017ல் உங்களை சந்தித்தோம் அப்போது கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை நாங்கள் உலக சாம்பியன்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களை சந்தித்தது பெருமையளிக்கிறது. எதிர்காலத்திலும் இதே மாதிரியான சூழலில் உங்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இலக்காக நிர்ணயிக்கிறோம் என்றார்.
வீராங்கனைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது,
நீங்கள் ஒரு மிகப்பெரிய காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் தோல்வியடைந்தால், நாடே அதிர்ச்சிக்குள்ளாகிறது, எனக் கூறினார்.
மேலும், உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகி விருதை வென்ற தீப்தி சர்மாவிடம், 'நீங்கள் கடவுள் ஹனுமன் டாட்டூ போட்டுள்ளீர்களே, அது எவ்வாறு உங்களுக்கு உதவியது?' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தீப்தி, 'என்னை விட கடவுள் ஹனுமன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன். அதுவே என்னுடைய விளையாட்டை மேம்படுத்த அதிகமாக உதவியது,' எனக் கூறினார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியின் முகம் பொலிவுடன் இருப்பதற்கு காரணம் என்று இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் கேள்வி எழுப்பினார். உடனே,'அதைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை,' என்று பிரதமர் கூறியதைக் கேட்டு இந்திய வீராங்கனைகளிடையே சிரிப்பலை எழுந்தது.
அப்போது, ஆல் ரவுண்டர் ஸ்நேகா ரானா, 'நாட்டு மக்களின் அன்பினால் தான் பிரதமரின் முகம் பொலிவுடன் இருக்கிறது,' என்றார்.
இதனைக் கேட்ட பிரதமர் மோடி,'நிச்சயமாக, என்னுடைய வலிமைக்கான காரணமே நாட்டு மக்கள் தான்.
நான் அரசு நிர்வாகத்தில் பல ஆண்டுகளை கழித்து விட்டேன். தொடர்ந்து ஆசிர்வாதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அதன் விளைவு தான் இவை எல்லாம், எனக் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b