Enter your Email Address to subscribe to our newsletters

கோல்டுகோஸ்ட், 7 நவம்பர் (ஹி.ச.)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின்
4-வது ஆட்டம் கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வழக்கமாக அதிரடியில் பட்டையை கிளப்பும் அபிஷேக் இந்த முறை 21 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். துபே தனது பங்குக்கு 22 ரன்கள் (18 பந்துகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வந்தார். அவர் அடித்து ஆட மறுமுனையில் பொறுமையாக ஆடி வந்த சுப்மன் கில் 46 ரன்களில் (39 பந்துகள்) அவுட்டானார்.
சிறிது நேரத்திலேயே சூர்யகுமார் யாதவ் 20 ரன்களில் (10 பந்துகள்) விக்கெட்டை பறிகொடுத்தார். ஆஸ்திரேலிய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் அதிரடிக்கு முட்டுக்கட்டை போட்டனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் திலக் வர்மா (5 ரன்கள்) மற்றும் ஜிதேஷ் சர்மா (3 ரன்கள்) இருவரையும் ஆடம் ஜம்பா, ஒரே ஓவரில் காலி செய்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதி கட்டத்தில் அக்சர் படேல் அதிரடியாக ஆட இந்திய அணி 150 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 167 ரன்கள் அடித்தது. அக்சர் படேல் 21 ரன்களுடனும், வருண் சக்ரவர்த்தி ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஜம்பா, நாதன் எல்லீஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் மிட்சேல் மார்சும், ஷார்ட்டும் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இவர்களில் மார்ஷ் 30 ரன்னிலும், ஷார்ட் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை அதிக ஸ்கோராக மாற்ற தவறினர். அத்துடன், இந்திய அணியின் அபார பந்துவீச்சால், ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி பேட்ஸ்மேன்களான டிம் டேவிட்(14), மேக்ஸ்வெல் (2), ஸ்டோய்னிஸ் (17) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், 5 பேட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Hindusthan Samachar / JANAKI RAM