Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் இன்று
(நவ 07) காலை சென்னை எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் கூட்டத்தில் 5
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
பிஹாரில் வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழ்நாட்டிலும் செயற்படுத்த முனைந்துள்ள ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சிகளும் முறியடிப்பது தலையாய கடமை என்பதை மதிமுக நிர்வாகக்குழு தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 2:
கல் குவாரிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்.
சட்ட விரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். முறைகேடாக இயங்கிய, இழப்புகள் ஏற்படுத்திய கல் குவாரி நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, சட்டவிரோதமாக குவாரியை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தீர்மானம் 3:
இந்துத்துவக் கருத்தியலின் இன்னொரு பரிணாமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை வரைவைக் கைவிடுவதுடன், தொழிற்சங்க அமைப்புகளின் கருத்துகளை அறிய வேண்டும்.
தீர்மானம் 4:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல் என்பதால் இதனைக் கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில், நவம்பர் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கழக நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5:
அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். இதுகுறித்து அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுநல இயக்கங்களின் கருத்துக்களையும் கேட்டு தீர்மானிக்க வேண்டும்.
என 5 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b