Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா இன்று (நவ 07) நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.
திருமண நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்தனர்.
எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர். அதனால் தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர்.
இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக நவ., 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் படிவங்களில் அளிக்கும் பெயர்கள் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் வரும் போது நாம் வீட்டில் இல்லாமல் போய்விட்டால் ஓட்டுக்களை இழக்கும் சூழல் ஏற்படும். ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b