Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.)
வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 'வந்தே மாதரம்' பாடலை, 1875ம் ஆண்டு நவம்பர் 7ல் அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், 'ஆனந்த மடம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டு நிறைவடைவதை இசை, கலை நிகழ்ச்சி நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (நவ.,07) துவங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இன்று துவங்கி நவ.,14 வரையிலும் முதல் கட்டமாகவும், குடியரசு தினத்தையொட்டி 2026 ஜனவரி 19 - 26 வரை இரண்டாம் கட்டமாகவும், 2026 ஆக.,7 - 15 வரை மூன்றாம் கட்டமாகவும், பின் 2026 நவ.,1-7 வரை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட வேண்டும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று (நவ 07) ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சன்யாசி கலகத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்ற அழியாத பாடலை பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றினார்.
1905-ம் ஆண்டு சுதேசி இயக்கத்தின்போது இது மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக மாறியது.
பாரத அன்னையை புகழ்ந்து பாடும் இந்த பாடல், நம் நாட்டு மக்களின் உணர்வு மற்றும் ஒற்றுமையின் பிரகடனமாக இருந்து வருகிறது. அது என்றும் அவ்வாறே நிலைத்திருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு, இதனை தேசிய பாடலாக நமது நாடு மரியாதையுடன் ஏற்றுக்கொண்டது.
இந்த பாடலின் 150-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சமயத்தில், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும், இந்த பாடலின் அர்த்தத்திற்கு ஏற்ப, இந்தியாவை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்போம் என்று உறுதிமொழி எடுப்போம். வந்தே மாதரம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b