கோவையில் இளம்பெண் கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.) கோவையில் இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி
கோவையில் இளம்பெண் கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)

கோவையில் இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் – தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியைப் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது.

எனவே, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b