Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 7 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் தற்போது கார் சாகுபடியானது நிறைவு பெற்று பிசான சாகுபடியானது தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான விவசாயிகள் பிசான சாகுபடி நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரானது கிடைக்கும் வகையில், இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகளில் இருந்து தண்ணீரானது பாசனத்திற்காக திறக்கப்பட்டது.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணையான மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், சொக்கம்பட்டி கருப்பாநதி நீர்த்தேக்கம், கடையம் ராமநதி நீர்த்தேக்கம் உள்ளிட்ட 3 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்றைய தினம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்.
குறிப்பாக, இன்று முதல் சுமார் 145 நாட்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை பிசான சாகுபடிக்கான தண்ணீரானது திறந்த விட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 3 அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கான தண்ணீரானது திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுமார் 22,100 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் எனவும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதிகள் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்று அணைகளிலும் தண்ணீரில் அளவு வெகுவாக அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும் என்பதால் தென்காசி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN