Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 7 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திமுக எம்.பி. கனிமொழி இன்று (நவம்பர் 7 ஆம் தேதி) திறந்து வைத்தார்.
மேலும் தூத்துக்குடி - முத்தையாபுரம், ஜே.எஸ். நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
அப்போது, அமைச்சர் கீதா ஜீவன், ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகாரட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. கனிமொழி,
தேர்தலுக்கு முன்னால் எஸ்ஐஆர் பணிகளை இப்படி அவசர அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது.
உண்மையாக நேர்மையாக நடத்த வேண்டும் என்று நினைத்தால் போதிய கால அவகாசம் கொடுத்து எஸ்ஐஆரை சரியாக கையாண்டிருக்க முடியும். இதனால் பீகாரில் எத்தனை பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
சமீபத்தில் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட, எந்த அளவுக்கு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். நம்முடைய முதலமைச்சரும் அதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
ஐனநாயகத்தை கொலை செய்யும் முயற்சியே எஸ்ஐஆர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு பல பிரச்சினைகளை வாக்காளர் உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனை எதிர்த்து தான் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.
தொடர்ந்து பேசும் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கனிமொழி பேசினார்.
அப்போது கரூர் துயரச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, சமீபத்தில் நடந்த பிரச்சினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டுதான், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டன என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN