Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 7 நவம்பர் (ஹி.ச.)
பீஹார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (நவ 6) நிறைவு பெற்றது.
பீஹாரில் 2வது கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு , ஜமுய் பகுதியில் பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவ 07) உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது,
மீண்டும் ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதை பீஹார் முதற்கட்ட தேர்தலிலேயே மக்கள் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவித்து விட்டனர்.
உடைகளையும், முகத்தையும் மாற்றிக் கொண்டு மீண்டும் காட்டாட்சியை கொண்டு வரத் துடிப்பவர்களை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது.
லாலு பிரசாத்தும், காங்கிரஸ் கட்சியினரும் சீதைக்கு கோவில் கட்டுவதை எதிர்க்கலாம். ஆனால், நான் இந்த வீர மண்ணான ஜமுயில் இருந்து ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
பாஜவும், என்டிஏ தொண்டர்களும் இணைந்து சீதைக்கு கோவிலை கட்டியே தீருவோம். ஐந்தரை நூற்றாண்டுகளுக்கு முன்பு, ராமர் கோவிலை பாபர் இடித்தார். அதன்பிறகு முகாலயர்கள் அதன் மறுகட்டுமானத்தை தடுத்தனர். தொடர்ந்து, பிரிட்டீஷ்காரர்கள் தடுத்தனர். அதன்பின்னர், காங்கிரஸ் தடுத்தது.
ஆனால், 2019ம் ஆண்டு பிரதமர் மோடியை நீங்கள் பிரதமர் ஆக்கினீர்கள். அந்த ஆண்டே ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போடப்பட்டு, 2024ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு விட்டது. தற்போது புதிய ஜெயின் சமூக கோவிலை கட்டி வருகிறோம்.
அண்மையில் பெண் தொழில் முனைவோர் குழுவான ஜீவிகா திதியினரின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய பிரதமர் மோடியும், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் முடிவு செய்துள்ளனர். ஆனால், லாலு பிரசாத் அந்தத் திட்டத்தை நிறுத்தி விடுவேன் என்கிறார்.
ஆனால் நான் உங்களுக்கு தெளிவாக சொல்கிறேன். லாலு பிரசாத் மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் கூட ஜீவிகா திதிகளுக்கு சொந்தமான பணத்தை தொட முடியாது.
அவர்கள் (இன்டி கூட்டணி) ஆட்சிக்கு வந்தால் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை செய்யும் துறைகளை நடத்துவார்கள். நமது பீஹார் மீண்டும் ரத்தத்தில் நனையும். நாம் அதனை நடக்க விட மாட்டோம். ஏற்கனவே துன்பத்தை விளைவித்தவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது.
நக்சலைட்டுகள் ஒரு காலத்தில் இந்த பகுதிகளிலும் தங்களின் தளங்களை நிறுவியிருந்தனர். முழு பிராந்தியமும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
சுமார் 150 நக்சலைட்டுகள் தான்பாத்-பாட்னா எக்ஸ்பிரஸை கடத்தி மூன்று பயணிகளைக் கொன்றனர். கயா, அவுரங்காபாத் மற்றும் ஜமுயி அனைத்தும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.
தற்போது, அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b