நாளை புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் - பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்
புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.) இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்க
நாளை புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் - பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்


புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

அதன் விவரம்:

1. எர்ணாகுளம் - பெங்களூரு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை வந்தே பாரத் ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடங்களாக குறையும்.

இந்த ரயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்ல உள்ளது. இரண்டு முக்கிய ஐடி மற்றும் வர்த்தக மையங்களை இணைப்பதால், வல்லுநர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறுவதுடன் தமிழகம், கேரளா, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

2. பனாரஸ் - கஜூராகோ

உ.பி.,யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.,யின் கஜூராகோ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலானது, வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கஜூராகோவுக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விரைவாக செல்ல முடிவதுடன் ,நவீன மற்றும் சொகுசுசான பயணத்தை உணர முடியும்.

3. லக்னோ - ஷஹாரான்பூர்

உ.பி.,யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான வந்தே பாரத் ரயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.

ரூர்கி வழியாக ஹரித்வார் செல்பவர்களுக்கு பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உ.பி.,யின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை இணைப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்குண்டு.

4. பிரோஸ்பூர் - டில்லி

பஞ்சாபின் பிரோஸ்பூர் - டில்லி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும். டில்லியில் இருந்து பஞ்சாபின் பதின்டா, பாட்டியாலா நகரங்களுக்கான இணைப்பு பலம் பெறும்.

வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM