Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 7 நவம்பர் (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாலிங்கம்(58), தனது மனைவி ருக்குமணி(45) என்பவருடன் திருவாரூரில் இருந்து சென்னைக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
இன்று காலை கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ரயில் வந்த போது தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்த போது தாங்கள் கொண்டு வந்த லக்கேஜ் பேக்குகளில் ஒன்று காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மகாலிங்கம், ருக்குமணி தம்பதியினர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்குள்ள ரயில்வே போலீசாரிடம் தங்களது லக்கேஜ் பேக் காணவில்லை என்றும் அந்த பையில் 276 கிராம் தங்க நகை இருந்ததாகவும் தெரிவித்து புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது காணாமல் போன லக்கேஜ் பேக்கில் எவ்வளவு நகைகள் இருந்தது, அது எந்த மாதிரியான நகை, எங்கு வாங்கியது, ஏன் அவ்வளவு நகைகளை லக்கேஜ் பேக்கில் வைத்து எடுத்து சென்றீர்கள் என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு தம்பதியிடம் விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் ரயில்வே போலீசார் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திணறிய அந்த தம்பதி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், தம்பதியிடம் இருந்த மற்ற லக்கேஜ் பேக்குகளை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது ஒரு லக்கேஜ் பேக் முழுவதும் கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும், தங்க நகைகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீசார், தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சென்னையில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் ரூ.27 லட்சத்திற்கு 200 கிராம் தங்க நகைகளை இன்சூரன்ஸ் செய்து வாங்கி கொண்டு ரயில் மூலம் திருவாரூர் சென்று, அங்கு தங்களிடம் இருந்த பழைய நகைகளையும், சில புதிய நகைகளை விற்று அதன்மூலம் கிடைத்த ரூ.31 லட்சம் ரொக்கப் பணத்தையும் எடுத்து கொண்டு மீண்டும் சென்னைக்கு ரயில் மூலம் தம்பதி வந்தது.
அப்படி வரும் போது தான் தங்களது நகை திருடு போனதாக பொய் புகார் அளித்திருப்பதும் ரயில்வே போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த தம்பதி, நகைகளை இன்சூரன்ஸ் செய்து வாங்கி கொண்டு ரயிலில் பயணம் செய்வதும், ரயிலில் பயணம் செய்யும் போது நகைகள் காணாமல் போனதாக போலீசாரிடம் பொய் புகார் அளித்து, அதன்மூலம் நகைக்கான இன்சூரன்ஸ் பணத்தை பெற்று நூதன மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இதே போன்று பல்வேறு மாநிலங்களிலும் தங்களது நூதன மோசடியை இந்த சென்னை தம்பதி அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தம்பதிகளான மகாலிங்கம், ருக்குமணியை விழுப்புரம் ரயில்வே போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 140 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.31 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN