Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 8 நவம்பர் (ஹி.ச.)
பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகளின் 22 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இந்தச் சூழலில், பிஹார் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (நவ 08) அறிவித்துள்ளது.
2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சராசரி வாக்குப்பதிவு 57.29 சதவீதமாக இருந்தது என்றும், 2024 மக்களவை பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு 56.28 சதவீதமாக இருந்தது என்றும், தற்போதைய 65.08% வாக்குப்பதிவு முந்தைய இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த வாக்காளர் பங்கேற்பு அதிகரிப்பை பிரதிபலிக்கிறது எனவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
முன்னதாக 64.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரபூர்வமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b