Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 8 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாராபுரம் சுல்தானிய தெரு பள்ளிவாசல் அருகே வசித்து வரும் முகமது ஹசன் (வயது 32) என்பவர், பொறித்த ரொட்டிக்கடை வியாபாரம் செய்து வந்தார்.
இவரது அண்ணன் மகள் தாஹிரா (வயது 13), பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பத்தினர் மொத்தம் 12 பேர், இன்று மதியம் அமராவதி ஆற்றில் நீராடச் சென்றனர்.
அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக, முகமது ஹசன் மற்றும் தாஹிரா ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதை கவனித்த உறவினர்கள் 10 பேர், அவர்களை காப்பாற்ற பல மணி நேரம் போராடினார்கள்.
எனினும், முயற்சிகள் பலனளிக்கவில்லை. உடனடியாக அலங்கியம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் பெற்ற காவல் ஆய்வாளர் விஜயசாரதி மற்றும் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, நீண்ட நேரம் போராடி இருவரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர், உடல்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், முகமது ஹசன் மற்றும் தாஹிரா இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினர்.
இந்த பரிதாபமான சம்பவம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தாராபுரத்தில் ஏற்கனவே 64 பேர் அமராவதி ஆற்று நீரில் மூழ்கி பலியானதை யொட்டி மீண்டும் இரண்டு பேர் உயிரிழந்தது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN