வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச) சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு 3
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச)

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்கு 3 ஆயிரத்து 718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 1,859 மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று 27.10.2025 அன்றைய தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தின் 2 நகல்களை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்குவார்கள்.

இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் மற்றும் வாக்காளரின் உறவினர் விவரங்களை சிரமமின்றி நிரப்புவதற்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை கொண்டு இந்த படிவத்தை நிரப்புவதற்கு உதவிடுவார்கள்.

கணக்கெடுப்பின்போது, வாக்காளரின் வீடு பூட்டியிருந்தாலோ அல்லது வெளியே சென்றிருந்தாலோ கணக்கீட்டு படிவங்களை வழங்குவதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவதற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 3 அல்லது 4 முறை வாக்காளர்கள் வீட்டுக்கு செல்வார்கள்.

வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 கணக்கீட்டு படிவத்தில் ஒன்றினை தாங்கள் வைத்து கொண்டு, மற்றொன்றினை தங்களது வீட்டுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவத்துக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும்.

இந்த பணி வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரையில் நடைபெறும். எனவே, வாக்காளர்கள் எவ்வித பதற்றமுமின்றி தங்களது படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மேற்கண்ட தேதிக்குள் வழங்கலாம்.

இந்த படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b