Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவ தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஐந்தாவது வீதி பகுதியில் ஜிச்சு விஷ்ணு நடந்து சென்ற பொழுது அங்கிருந்த வீட்டின் முன்பாக இரண்டு குட்டி நாய்கள் படுத்து கிடந்துள்ளன.
அப்போது அதனை கண்ட விஷ்ணு திடீரென அங்கிருந்த செங்கல்லை எடுத்து நாய்க்குட்டிகளை கடுமையாக தாக்கியுள்ளார்.
அதில் நாய்க்குட்டிகள் படுகாயம் அடைந்து அங்கேயே உயிரிழந்த நிலையில் அவற்றை கடந்து விஷ்ணு சென்றுள்ளார் .பின்னர் இன்று காலை நாய்க்குட்டிகள் இரண்டும் உயிரிழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் நடந்து செல்லும் ஜிச்சு விஷ்ணு திடீரென நாய்க்குட்டிகளை கற்களை கொண்டு பலமாக தாக்குவதும் அந்த தாக்குதலில் நாய்க்குட்டிகள் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்க நிர்வாகிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். பின்னர் சரவணம்பட்டி காவல் காவல் நிலையத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குட்டி நாய்களை கொல்லும் கொடூரனின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan