Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 8 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிராவை நோக்கி இராட்சச காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி அம்மையநாயக்கனூர் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இராட்சச காற்றாலை இறக்கை ஏற்றி வந்த சுமார் 100 அடி நீளம் உள்ள கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்ததால், சுமார் 150 அடி நீளமுள்ள காற்றாலை ரெக்கை சாலையில் கிடக்கிறது.
இதனால், வேறு வாகனங்கள் மதுரை - திண்டுக்கல் மார்க்கமான செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த விபத்தால், மதுரை - திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் கார், பேருந்து, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், காலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமையநாயக்கனூர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து, ஒரு வழி சாலையில் வாகனங்கள் இயக்கி விடப்பட்டனர்.
குறிப்பாக, நான்கு வழிச்சாலை பொட்டிகுளம் முதல் டோல்கேட் வரை, சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் ஒரு வழிபாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஒரு வழி பாதையில், மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஸ்கூட்டியில் சென்ற ஒருவர்மீது, எதிரே வந்த மினி லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதேபோல் அதிகாலையில், தூத்துக்குடிக்கு காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரிக்கு, பாதுகாப்பாக சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
அப்போது, சொகுசு பேருந்துக்கு பின்னால் வேகமாக வந்த மினி லாரி மோதி, விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லாததால் தொடர் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தொடர் விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN