Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 8 நவம்பர் (ஹி.ச.)
உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 88.66 லட்சம் கோடி) சம்பளம் வேண்டும் என்று டெஸ்லா பங்கு தாரர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து டெக்சாசின் ஆஸ்டின் நகரில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் எலான் மஸ்க் சம்பள விவகாரம் தொடர்பாக வருடாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் டெஸ்லாவில் எலான் மஸ்க்கை வைத்து இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் வெளியேறினால் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சி அடையும் என்றும் அதன் தலைவர் ராபின் டென்ஹோம் தெரிவித்தார். இதனால் எலான் மஸ்க் சம்பள விவகாரத்தில் ஆதரவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
கூட்ட முடிவில் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு எலான் மஸ்க்கிற்கு அவர் கேட்ட ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்கு தாரர்கள் ஒப்புதல் அளித்தனர். மொத்தம் உள்ள பங்குதாரர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.
டெஸ்லா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலர் ஆகும். இதனை 8.5 டிரில்லி யன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் எலான் மஸ்க் தொடர்ந்து 7 ஆண்டுகள் டெஸ்லா நிறுவனத்தில் சேவையை தொடர்வது உறுதியாகி இருக்கிறது.
செயற்கை தொழில் நுட்பம் (ஏ.ஐ.) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளில் கடும் போட்டி நிலவும் இந்த சூழ்நிலையில் இந்த சம்பள உயர்வு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக டெஸ்லா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் சம்பள உயர்வால் டெஸ்லாவின் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM