Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)
கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் செங்கல் சூளை அருகில் ராகவன் என்பவர் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கடந்த 3ம் தேதி கண்டெடுக்கப்பட்டார்.
அவர் கொலை செய்யப்பட்டது போலிசார் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
கொலையாளியை தனிப்படை போலிசார் தேடிய நிலையில் ராகவனை கொலை செய்தது கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன்(42) என்பது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் சரவணனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சரவணன் காந்திபுரத்தில் உள்ள தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் கம்பெனியில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. கடந்த இரண்டாம் தேதி நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்த பொழுது தான் இருவருக்கும் நண்பர்களாகியுள்ளனர்.
பின்னர் ராகவன் தன்னுடன் தடாகம் பகுதிக்கு வந்தால் மாமாவிடம் பணம் வாங்கி மதுவும் உணவும் வாங்கி வருகிறேன் என கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் தடாகம் தண்ணீர் பந்தலுக்கு வந்துள்ளனர்.
அங்கு வந்தும் ராகவன் சரவணனிடம் தனது மாமா வரும் வரை மது வாங்கி தருமாறு வற்புறுத்தியதாகவும் எனவே தண்ணீர் பந்தல் பகுதியில் இயங்கி வரும் மதுபான கடையில் மது வாங்கி இருவரும் அதனை குடிக்க முடிவு செய்ததாகவும் முதல் பாதியை ராகவன் குடித்த நிலையில் சிகரெட் வாங்குவதற்கு பெட்டி கடைக்கு சென்று விட்டு வந்து பார்க்கும் பொழுது மீதம் இருந்த மதுவையும் ராகவன் குடித்து காலி செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ராகவனின் தலையில் அருகில் இருந்த வேக வைக்காத பச்சை செங்கலை கொண்டு தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து கவுண்டம்பாளையத்திற்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் சரவணன் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நண்பர்களான முதல் நாளிலேயே மதுவால் ஏற்பட்ட பிரச்சனையில் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan