Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 8 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை மற்றும் எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
எரிமேலியில் விற்பனை செய்யப்படும் ரசாயன குங்குமம் குறித்து சில கருத்துக்களை வக்கீல் ஒருவர் ஐகோர்ட்டில் முன் வைத்தார்.
எரிமேலியில் பேட்டை துள்ளலில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடலில் பல வண்ண குங்குமபொடிகளை பூசிக் கொள்வார்கள். முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரசாயன குங்குமம் சந்தைகளில் முன்னணியில் உள்ளது.
அந்த குங்குமத்தையே பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பின்பு அவர்கள் ஷாம்பு மற்றும் சோப்புகளை அதிகளவில் பயன்படுத்தி ஆற்றில் குளிக்கிறார்கள். ஷாம்பு மற்றும் சோப்பு இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் கண்ட இடத்தில் வீசப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து சபரிமலை-எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் ஷாம்பு-சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை விற்பனை செய்யதடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தேவசம்போர்டு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்யவும் ஐகோர்ட் ஆணையிட்டது.
இந்த விஷயத்தில் எரிமேலி பஞ்சாயத்து மற்றும் செங்கனூர் நகராட்சி ஆகியவை சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 12-ந்தேதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும், அப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM