Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 8 நவம்பர் (ஹி.ச.)
பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பகவான் ராமரின் மனைவி சீதாதேவியின் பிறந்த ஊராகக் கருதப்படும் சீதாமர்ஹி-யில் இன்று
(நவ 08) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பீஹாரில் ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்கவில்லை. ஆர்ஜேடி கூட்டணியை பீஹார் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. தேஜ கூட்டணி ஊழலை நிராகரிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் ஓட்டளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டீர்கள்.
அவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கிறார்கள். அதிக ஓட்டுப்பதிவு தேஜ கூட்டணிக்கு அபரிமிதமான ஆதரவைக் குறிக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் தான் தொடங்கிய திட்டத்தின் கீழ், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு உள்ளது. காட்டாட்சி ராஜ்ஜியத்தின் கீழ் இது ஒருபோதும் சாத்தியமில்லை. சாத் பண்டிகையை ஒரு நாடகம் என்று கூறி பீஹார் பெண்களின் நம்பிக்கையை ராகுல் அவமதித்துள்ளார்.
இது எங்கள் உணர்வுகளுக்கு அவமதிப்பு இல்லையா? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? மகா கும்பமேளா மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை அவமதித்துள்ளனர். நமது கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர்களின் ஓட்டு வங்கி அரசியலின் காரணமாக, ஆர்ஜேடி-காங்கிரஸ் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட பிரபலமான பல ஆலயங்களையும் கூட புறக்கணித்துள்ளன. ஓட்டு வங்கி அரசியலால் வழிநடத்தப்படுபவர்களால் ஒருபோதும் மாநிலத்திற்கு நல்லது செய்ய முடியாது. அவர்களின் ஓட்டு வங்கி அரசியல் அவர்களை ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க வழிவகுத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b