Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, வழக்கு கோப்புகளை மாநில காவல்துறை சிபிஐ'யிடம் ஒப்படைக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் வாதிட்டனர்.
இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழக காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இந்த சூழலில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்றும் வாதிட்டார். மேலும், சமீபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படும் நாகேந்திரன் இறக்கவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்ப வைத்து விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அஸ்வத்தாமன், அரிகரன் மற்றும் அஞ்சலை ஆகிய மூவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நவம்பர் 10 ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்துள்ளார்.
மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 11 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ