Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 8 நவம்பர் (ஹி.ச.)
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக சிறப்பு பெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலானது முருக பெருமான் கோவில்களில் ஒரே கடற்கரை கோவிலாகும்.
இந்நிலையில், பௌர்ணமி இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி இருந்து முழுநிலவைக் கண்டு பூஜை செய்து, அதிகாலையில் முருகப்பெருமானை தரிசித்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கை சமீபகாலமாக வழக்கத்திற்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில பௌர்ணமி தினங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அன்றைய தினம் பலர் குடும்பத்துடன் கடற்கரையில் தங்கி, நிலாவை நோக்கி பூஜை செய்து, விரதம் இருந்து, விடிய விடிய விழித்திருந்து, அதிகாலை நேரத்தில் குளித்து, கோவிலுக்குள் சென்று விஸ்வரூப தரிசனம் செய்கின்றனர்.
சமீப காலமாக கோவில் முன்பு தங்கும் பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதும் பொருட்கள் காணாமல் போவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனை தடுக்க இன்று
(நவ 08) முதல் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருக்கும் பக்தர்களை திருக்கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர், அப்புறப்படுத்தினர்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் முன்புள்ள கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி திருக்கோவில் முன்புள்ள கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோவில் வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b